கர்நாடகாவில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு, போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கியுள்ள தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.
வாகனங்களில் பொருத்தப்படும் ஹாரன்கள் அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் ஒலி எழுப்பும் திறன் கொண்டதாக மட்டுமே இருக்க வேண்டும் என சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், ஆட்டோ, கார், லாரி, பேருந்து போன்ற ஒவ்வொரு வாகனத்திலும் வெவ்வேறு மாதிரி ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்கள் உள்ளன.
85 டெசிபலுக்கு மேலான ஒலி மனிதனின் செவித்திறனை பாதிக்கும் என்பதால், இதுபோன்ற வாகனங்களில் பொருத்தப்படும் ஹாரன்களின் ஒலி அதற்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும் என்பது அவசியம்.
ஆனால் அவ்வாறு இல்லாமல் சாதாரண இருசக்கர வாகனங்களில் காருக்கு பொருத்தப்படும் ஹாரன்கள் பொருத்தி ஒலி எழுப்புவது, தனியார் பேருந்துகளில் ஒரே நேரத்தில் பல விதமான ஒலியை எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்துவது போன்ற செயல்கள் பல அசம்பாவிதங்கள் நேர வழிவகுக்கின்றன.
இதனால் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்தது. அதன் எதிரொலியாக தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் ஹாரன்களை பறிமுதல் செய்வது, அபராதம் விதிப்பது உள்ளிட்ட பல சட்ட நடவடிக்கைகள் மாநில காவல்துறையால் முன்னெடுக்கப்பட்டன.
இருப்பினும் ஒரு சிலர் தனியார் பேருந்துகளிலும், இரு சக்கர வாகனங்களிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பொருத்தி, பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்து வருகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை ஓட்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு கர்நாடக மாநில போக்குவரத்து போலீசார் நூதன முறையில் வழங்கி வரும் தண்டனை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி வரும் வாகனங்களை மடக்கி பிடிக்கும் போக்குவரத்து போலீசார், அதன் ஓட்டுநர்களை அந்த ஹாரன்களின் ஒலியை நேரடியாக கேட்கவைத்து தண்டனை வழங்கி வருகின்றனர். போலீசாரின் இந்த அதிரடி செயல்பாடு வாகனங்களில் உள்ள ஏர் ஹாரன்களை கழற்றி வீசும் அளவுக்கு வாகன ஓட்டிகளை கதிகலங்க செய்துள்ளது.
இந்நிலையில், போக்குவரத்து போலீசாரின் இந்த நடவடிக்கையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள இளைஞர் ஒருவர், மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் சரியான தண்டனை வழங்கி பாடம் புகட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், போக்குவரத்து போலீசாரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.