நெய்வேலி என்எல்சி நிறுவன சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனத்தின் சார்பில் சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. சுரங்கங்களின் விரிவாக்க பணிகளுக்காக 2011ஆம் ஆண்டு வானதிராயபுரம் கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தப்போவதாகவும், நிலங்களை வழங்குவோரின் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்கப்படும் எனவும் என்எல்சி அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, சிலர் சுரங்க விரிவாக்க பணிக்காக நிலங்களை வழங்க ஒப்புக்கொண்ட நிலையில், வானதிராயபுரம் கிராமத்தைச் சார்ந்த 55 பட்டதாரிகள் என்எல்சி நிறுவன பணிகளுக்கு தேர்வாகி உள்ளதாகவும், அவர்களின் நிலங்களை என்எல்சி கையகப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
இந்நிலையில், குறிப்பிட்ட சிலரின் நிலங்களை மட்டும் அளவீடு செய்யக் கூடாது எனக்கூறி கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைவரின் நிலங்களையும் ஒரே நேரத்தில் கையகப்படுத்த வேண்டும், ஏக்கர் ஒன்றிற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.