உலகின் அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயங்கும் ரயில் எஞ்சினை உள்நாட்டிலேயே இந்தியா உருவாக்கி உள்ளது. இதன் மூலம், பசுமை ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் ஐந்தாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.
ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணியில் இந்தியாவும் இறங்கியது. சென்னையில் ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டது.
2023-24 நிதியாண்டில், 35 ஹைட்ரஜன் ரயில்களை மேம்படுத்த 2800 கோடி ரூபாய் ரயில்வே அமைச்சகம் ஒதுக்கியது. மேலும், பாரம்பரிய வழித்தடங்களுக்கான ஹைட்ரஜன் உள்கட்டமைப்புக்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஒவ்வொரு ஹைட்ரஜன் ரயிலும் 80 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது. மேலும் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரயிலை இயக்குவதற்கான கட்டமைப்பை உருவாக்க 70 கோடி ரூபாய் செலவிடப்படும்.
உலகளவில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ரயில்களை வெற்றிகரமாக உருவாக்கி உள்ளன. அந்த ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் 500 முதல் 600 வரை குதிரைத்திறன் கொண்டவையாகும். ஆனால்,இந்திய ரயில்வேயின் ஹைட்ரஜன் ரயில் இன்ஜின் ஒப்பிடமுடியாத 1,200 குதிரைத்திறன் கொண்டதாகும்.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்திய ஹைட்ரஜன் ரயில் இன்ஜின், உலகின் வேறு எந்த நாடும் உருவாக்கிய இன்ஜினை விட அதிகபட்ச குதிரைத்திறனை உற்பத்தி செய்கிறது. எனவே இந்தியா தயாரித்த ஹைட்ரஜன் ரயிலே உலகின் அதிக சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் ரயிலாகும்.
ஹைட்ரஜன் ரயிலின் முதல் சோதனை ஓட்டம், ஹரியானாவில் ஜிந்த்-சோனிபட் பாதையில் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தவகை ஹைட்ரஜன் ரயில்கள் இயங்குவதற்குத் தேவையான மின்சாரத்தை ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் உருவாக்குவதால் தனித்து நிற்கின்றன.
ஹைட்ரஜனை ஆக்ஸிஜனுடன் இணைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.எனவே, தீங்கு விளைவிக்கும் உமிழ்வை நீக்குகின்றன.
பாரம்பரிய டீசல் அல்லது மின்சார இயந்திரங்களுக்கு மாற்றாக ஹைட்ரஜன் ரயில்கள் விளங்குகின்றன. குறைந்த கார்பன் தடம் மற்றும் குறைக்கப்பட்ட ஒலி மாசுபாடு ஆகியவற்றால், ஹைட்ரஜன் ரயில்கள், ரயில் பயணிகளுக்கு பசுமையான மற்றும் அமைதியான பயண அனுபவத்தை வழங்கும் என்று கூறப் பட்டுள்ளது.
இந்த ஹைட்ரஜன் இன்ஜின் தொழில்நுட்பம், லாரிகள், இழுவை படகுகள் மற்றும் பிற தொழில்துறை பயன்பாடுகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவின் பசுமை ஆற்றலுக்கான செயல் திட்டத்தை இந்த ஹைட்ரஜன் ரயில் , வெளிக்காட்டுகிறது.
இந்திய ரயில்வே துறையின் இந்த சாதனை ஹைட்ரஜன் ரயில் உலகளாவிய பசுமை எரிசக்தி நிலப்பரப்பில் இந்தியாவின் நிலையை உயர்த்தி உள்ளது.
நாட்டின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப தன்னிறைவைக் காட்டும் ஹைட்ரஜன் ரயில், பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தொலைநோக்கு பார்வையின் அடையாளமாக உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த எதிர்கால போக்குவரத்துக்கான சாதனையாக இந்த ஹைட்ரஜன் ரயில் பாராட்டப் படுகிறது.
















