திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி பிப்ரவரி 4ஆம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திருப்பரங்குன்றம் மலை, திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சொந்தமானது என லண்டன் பிரிவியூ கவுன்சில் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், 1996-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் குன்றில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில், இந்து சமய அறநிலையத்துறை, தீபத் தூணில் தீபம் ஏற்றாமல் மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தீபத்தூணில்தான் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டுமென இந்து முன்னணியும், இந்துக்களும் பலமுறை போராட்டம் நடத்தியும் அரசு அனுமதி அளிக்காமல் தடுத்து வருகிறது என காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ் இலக்கியங்களிலும், ஆவணங்களிலும் திருப்பரங்குன்றம் முருகன் வீற்றிருக்கும் புனித மலை என்பதற்கான சான்று இருப்பதாக கூறியுள்ள அவர், அந்த இடத்தின் மீது எந்த உரிமையும் இல்லாத இஸ்லாமிய அமைப்புகள், அங்குள்ள தர்காவில் ஆடு வெட்டி கந்தூரி செய்வோம் என திட்டமிட்டு மதக் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் ராமநாதபுரம் MP நவாஸ் கனி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறிய முருகன் கோயில் முன்பாக அசைவ உணவை சாப்பிட்டதை சுட்டிக்காட்டுள்ள காடேஸ்வரா சுப்பிரமணியம், கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் இஸ்லாமிய அமைப்புகளை கண்டித்து பிப்ரவரி 4-ம் தேதி மாபெரும் அறப்போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.