கலப்படம் குறித்த விழிப்புணர்வை மாணவ சமுதாயம், பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “கோவையில், பேரூர் ஆதீனம், தெய்வத்திரு பெருந்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லூரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை இணைந்து நடத்திய, கோவை அறம் அறக்கட்டளை தலைவர். ப. ரகுராமன் அவர்கள் எழுதிய ‘மறைந்திருக்கும் மர்மம்’ என்ற கலப்பட விழிப்புணர்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
5,000 மாணவர்களுக்கு, இலவசமாக வழங்கப்படவிருக்கும் இந்த, மறைந்திருக்கும் மர்மம் நூல், கலப்படத்தைக் கண்டறியும் வழிகள் குறித்துப் பேசுகிறது. இதன் மூலம், சமூகத்தில் கலப்படம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மாணவ சமுதாயம், இதனைப் பெரிய அளவில் பொதுமக்களிடையே கொண்டு சென்று, கலப்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தவத்திரு பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தவத்திரு சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் ஆசீர்வதித்து முன்னிலை வகித்த இந்த விழாவில், கோவை கே.ஜி.மருத்துவமனை தலைவர் G. பக்தவச்சலம், தமிழக பாஜக
மாநிலப் பொருளாளர் எஸ்ஆர்.சேகர் , தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் முனைவர் திரு. சி. சுப்பிரமணியம், டாக்டர் அரவிந்தன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.