வட மாநிலங்களில் நடைபெறும் கபடி போட்டிகளில் பாரபட்சம் பார்க்கப்படுவதால் தென் மாநில அணிகளுக்கு பிரச்சனை ஏற்படுவதாக தமிழ்நாடு அன்னை தெரசா பல்கலைக்கழக கபடி அணியின் மேலாளர் கலையரசி தெரிவித்துள்ளார்.
தேசிய அளவிலான கபடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அண்மையில் நடைபெற்ற போட்டியில் தமிழகத்தின் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியும், தர்பாங்கா பல்கலைக்கழக அணியும் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின்போது தர்பாங்கா பல்கலைக்கழக அணியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக அன்னை தெரசா பல்கலைக்கழக அணியினர் நடுவரிடம் புகார் அளித்தனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்த நிலையில், போட்டி நடுவரும் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து பஞ்சாபில் இருந்து டெல்லி வந்தடைந்த தமிழக அணியினர் தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அணியின் மேலாளர் கலையரசி, தாக்குதலில் காயமடைந்த மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும், வீராங்கனைகளின் பாதுகாப்பு கருதி அவர்களை தமிழகத்திற்கு அழைத்து செல்லும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தமிழகம் சென்றபிறகு சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.