ஜனநாயகத்தின் தாய் என்று உலகமே போற்றும் இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட தினம் ஆண்டுதோறும், குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனநாயகம் மலர்ந்த இந்த நன்னாளில், இந்திய குடியரசு தினம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. எனினும், ஆங்கிலேய ஆட்சியின் Government of India Act , 1935-படியே அரசு நிர்வாகம் நடத்தப்பட்டது. 1947ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி, அரசியல் நிர்ணய சபை, இந்திய அரசியல் அமைப்பை உருவாக்கத் தொடங்கியது.
கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பின் 1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி, இந்திய அரசியல் அமைப்பு சாசனம் ஏற்றுக் கொள்ளப் பட்டது. இந்திய அரசியல் அமைப்பை இறுதி செய்ய பல அமர்வுகள் நடந்தன. பல விவாதங்கள் நடை பெற்றன. டாக்டர் பி ஆர் அம்பேத்கர் இந்த வரைவுக் குழுவின் தலைவராக இருந்து, இந்திய அரசியல் அமைப்பு சாசனத்தை நெறிப்படுத்தினார்.
இறுதியாக, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய அரசியல் அமைப்பு சாசனத்துக்கு, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி, இந்திய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
இதன்பிறகு இரண்டு நாட்களுக்குப் பின், இந்திய அரசியல் அமைப்பு சாசனம் நடைமுறைக்கு வந்தது. தொடர்ந்து, 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி, இந்தியாவின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல் ராஜகோபாலாச்சாரி, இந்தியாவை ஜனநாயக குடியரசாக அறிவித்தார். அதன் பின்னர், இந்திய குடியரசின் முதல் குடியரசு தலைவராக ராஜேந்திர பிரசாத் பதவியேற்றார்.
ஆங்கிலேய ஆட்சியின் கீழ் பல ஆண்டு காலமாக அடிமை பட்டுக் கிடந்த பாரத தேசம், 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. எனினும் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி தான், தனித்த இறையாண்மை கொண்ட ஜனநாயக குடியரசாக மலர்ந்தது.
1929ம் ஆண்டு லாகூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பூர்ண சுதந்திர (முழு விடுதலை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, 1930ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியை முழு சுதந்திர தினமாகக் கொண்டாடுவதாக அறிவிக்கப்பட்டது .
இந்திய தேசிய காங்கிரஸ் அறிவித்த பூர்ணா ஸ்வராஜ் காரணமாக இந்த தேதி குடியரசு தினமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மக்களாட்சி நடைமுறைக்கு வந்த இந்த நாளையே இந்திய குடியரசு தினமாக கொண்டாடுவதற்கான அதிகாரப் பூர்வ தேதியாக அறிவிக்கப் பட்டது.
1950ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, இந்தியாவில் முதல் குடியரசு தினம் கொண்டாடப் பட்டது. அதன்பிறகு ஆண்டு தோறும், இதே நாளில், நாடு முழுவதும் இந்தியர்கள், குடியரசு தினத்தைத் தேசிய உணர்வோடு கொண்டாடி வருகிறார்கள்.
இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக, அப்போதைய இந்தோனேசிய அதிபர் சுகர்னோ கலந்து கொண்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைப் போற்றும் வகையில், இந்த ஆண்டு, குடியரசு தினம் வெகு விமர்சையாக கொண்டாடப் படுகிறது.
நாட்டின் ஒற்றுமை மற்றும் தேசபக்தியை மையமாகக் கொண்டு நாடு முழுவதும் குடியரசு தின நிகழ்ச்சிகள் கொண்டாடப் படுகிறது. புது டெல்லியில் ராஷ்டிரபதி பவனுக்கு, அருகிலுள்ள ரைசினா மலையிலிருந்து, கர்தவ்யா பாதையில், இந்தியா கேட்டைக் கடந்து, வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையில் நடைபெறும் அணிவகுப்பு தான் குடியரசு தின விழாவின் சிறப்பம்சமாகும்.
பல்வேறு மாநிலங்களின் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவின் பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறுகிறது.
குடியரசு தின விழாவில், முப்படையினரின் அணிவகுப்பு, இந்தியாவின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வாகனங்களின் அணிவகுப்புகளுடன், பாரம்பரிய கலச்சார நடன நிகழ்ச்சிகள், முப்படை வீரர்களின் வீரதிர செயல்கள் ஆகியவையும் இடம் பெறுகின்றன.
பொற்கால பாரதம் என்ற வகையில், கொண்டாடப் படும் இந்த 76 வது குடியரசு தினத்தில், பெற்ற சுதந்திரத்தைப் பேணி பாதுகாக்கும் வகையில், பாரத தேசத்தை வணங்கி மகிழ்வோம்.