திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் கண்டெடுக்கப்படும் சேதமடைந்த சிலைகள் குறித்து சமூக வலைதளங்களில் சிலர் தவறான வதந்திகளை பரப்புவதாக ஆன்மிகவாதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் மண் அரிப்பு ஏற்படும்போது சிதிலமடைந்த நிலையில் ஏராளமான சிற்பங்கள் மற்றும் சாமி சிலைகள் கண்டெடுக்கப்படுகின்றன.
பொதுமக்கள் கடலில் விட்டு செல்லும் சிதிலமடைந்த சிலைகள்தான் மண்ணரிப்பு காரணமாக வெளியே தெரிவதாக ஆன்மிகவாதிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த சிலைகள் குறித்து சிலர் சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பதிவிட்டு பொதுமக்களை ஏமாற்றி வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
சில அமானுஷ்யங்களால் தான் கடற்கரையில் மண்ணரிப்பு ஏற்படுவதாகவும், சிலைகள் வெளியே தெரிந்து மாயமாகி வருவதாகவும் சிலர் பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக கூறியுள்ளனர்.
இதுபோன்ற உண்மைக்கு மாறாக தவறான செய்திகளை பதிவிட்டு பக்தர்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வருபவர்கள் மீது கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆன்மிகவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.