அரசு பள்ளியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக நடிகர் விஷால் தெரிவித்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்காமல் அமைச்சர் அன்பில் மகேஸ் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஒக்கியம் துரைப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு, பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திறன்மிகு வகுப்பறைகள் அமைக்கும் திட்டத்தின் மூலம், அரசு தொடக்கப் பள்ளிகளில் 11 லட்சத்து 76 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து வருவதாகத் தெரிவித்தார்.
8 ஆயிரத்து 209 அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்கும் பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளதாக கூறினார். இடைநிற்றலை 5 சதவீதமாக குறைக்க பள்ளி மாணவர்களுக்காக விளையாட்டு, கலை, உள்ளிட்டவைகளில் ஆர்வம் காட்டப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அரசு பள்ளியில் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக நடிகர் விஷால் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பியபோது, அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலளிக்காமல் சென்றார்.