ZOHO தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்புவின் பதிவால், இந்திய அறிவியல் முறைகள் குறித்த விவாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது பற்றிய ஒரு தொகுப்பை தற்போது காணலாம்..!
சென்னை ஐஐடி-யின் இயக்குநராக உள்ள காமகோடி, மாட்டின் சிறுநீரில் பேக்டீரியா எதிர்ப்பு மற்றும் செரிமான நன்மைகள் அதிகம் இருப்பதாக அண்மையில் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கள் பல தரப்பினரின் விமர்சனங்களுக்கு உள்ளானது. சிலர் அவரது கூற்றுக்களை போலி அறிவியல் என முத்திரை குத்தினர்.
ஆனால் ZOHO நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்புவோ, காமகோடியின் கருத்துக்களை ஆதரித்து எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். மாட்டின் சிறுநீர் மற்றும் சாணத்தில் மருத்துவ குணங்கள் உள்ளது என்பது மூட நம்பிக்கை அல்ல, அது நவீன விஞ்ஞானம் என அந்த பதிவில் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து விமர்சகர்களுள் ஒருவரும், கல்லீரல் நிபுணருமான மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ், ஸ்ரீதர் வேம்புவின் பதிவை மேற்கோள்காட்டி அவரை அறிவியல் பற்றிய படிப்பறிவு இல்லாதவர் என குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். அதில், “பண்டையகால முட்டாள்தனத்தை” ஊக்குவிப்பதை நிறுத்துமாறும் மருத்துவர் சிரியாக் அபி பிலிப்ஸ் வலியுறுத்தியிருந்தார். மேலும், சிறுநீரில் எந்த வித நன்மைகளும் இல்லை என குறிப்பிட்ட அவர், அதன் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் எந்தவித அறிவியலும் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நவீன விஞ்ஞான அணுகுமுறையுடன் பாரம்பரிய நடைமுறைகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மருத்துவர் அபி பிலிப்ஸின் பதிவுக்கு ஸ்ரீதர் வேம்பு பதிலளித்துள்ளார். குறிப்பாக “அறிவியல் ஆணவத்துடன் கலக்காது என்பதால், மருத்துவ அறிவியலை நிறுவ பணிவு அவசியம்” என தெரிவித்துள்ள அவர், “விஞ்ஞான அறிவியல் நமக்கு முழுமையான உறுதிபாடுகளை ஒருபோதும் வழங்குவதில்லை” என கூறியுள்ளார்.
பிரபல கல்லீரர் நிபுணர் மற்றும் ZOHO தலைமை செயல் அதிகாரிக்கு இடையிலான விவாதங்கள் அடங்கிய இந்த பதிவுகள், சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தற்போது பலரும் அந்த பதிவுகளின் கீழ் பண்டைய அறிவியல் முறைகள் குறித்த விவாதங்களை மேற்கொண்டு வருகின்றனர்.