திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய தனியார் வங்கி ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
அம்பலூரைச் சேர்ந்த கணவரை இழந்த பெண் ஒருவர், மறைமலை நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வந்தார். அப்போது அதே கிளையில் வேலை செய்த தன்ராஜ் என்பவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பெண்ணுடன் தனிமையில் இருந்து வந்துள்ளார்.
அப்பெண் வேறு கிளைக்கு பணி மாறுதலாகி சென்றபோதும் இருவரது உறவும் நீடித்துள்ளது. இந்நிலையில் தன்ராஜூக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.
இதுகுறித்து முறையிட்ட பாதிக்கப்பட்ட பெண்ணிடம், இருவரையும் சேர்த்துவைப்பதாக கூறி தன்ராஜின் சகோதரரான யுவராஜ் என்பவர் 1 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார். பின்னர் அடியாட்களுடன் வந்த தன்ராஜின் குடும்பத்தினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், தன்ராஜ் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தன்ராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், கொலை மிரட்டல் விடுத்தவர்களையும் தேடி வருகின்றனர்.