இன்று மாலை 4.30 மணிக்குள் தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ்குமார் நேரில் ஆஜராகவில்லை என்றால், அவருக்கெதிராக வாரண்ட் பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, 2015 ம் ஆண்டு பதியப்பட்ட வழக்கு, அப்போதே முடித்து வைக்கப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும் காவல்துறை விளக்கம் அளித்தது.
இதையடுத்து, காவல் துறையினர் பதிவு செய்யும் வழக்குகளில் விசாரணை முடிந்த பின், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது இது முதல் வழக்கல்ல எனவும், பல வழக்குகளில் காவல்துறையினர் குறித்த காலத்திற்குள் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்வதில்லை என்றும் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
மேலும் காவல்துறையின் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து உள்துறை செயலாளருக்கு தெரியுமா எனக் கேள்வி எழுப்பிய நீதிபதி, அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணை வந்தபோது அரசு தரப்பில், உள்துறை செயலாளர் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி இன்று மாலை 4.30 மணிக்குள் உள்துறை செயலாளர் நேரில் ஆஜராகவில்லை எனில் அவருக்கு எதிராக வாரண்ட் பிறபிக்க நேரிடும் என எச்சரித்து வழக்கினை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.