தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குரூஸ்புரம் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோன்று, மயிலாடுதுறையில் உள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் கோயிலிலும் மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள ராஜலிங்கேஸ்வரர் சிவன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. யாக குண்டம் அமைத்து ஓதுவார்கள் சிவாச்சாரியர்கள் சிறப்பு பூஜை நடத்திய நிலையில், புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் நந்தி சிலை மற்றும் கோபுரத்தில் ஊற்றப்பட்டது.
கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா சிறப்பான முறையில் நடைபெற்றது. கடந்த 29ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கிய நிலையில், தேவநாத சுவாமிக்கு நாள்தோறும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக 9 கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.