வசந்த பஞ்சமியையொட்டி திரிவேணி சங்கமத்தில் அதிகாலை 16 லட்சத்து 50 ஆயிரம் பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. வரும் 26ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உலகம் முழுவதில் இருந்து கோடிக்கணக்கானோர் வருகை தந்துள்ளனர்.
மகா கும்பமேளா நிகழ்ச்சி தொடங்கியது முதல் தற்போது வரை 34 கோடி பக்தர்கள் புனித நீராடிய நிலையில், வசந்த பஞ்சமியையொட்டி திரிவேணி சங்கமத்தில் அதிகாலை 16 லட்சத்து 50 பேர் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவப்பட்டன.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வருகை தருவதால் பிரயாக்ராஜ் நகரில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புனித நீராடும் இடங்களில் தேவையின்றி கூட்டம் சேராதவாறு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.