100வது செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் உயர்த்தும் செயல்பாட்டை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
கடந்த 29ஆம் தேதி காலை 6.23 மணிக்கு, இஸ்ரோ தனது 100வது செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இந்நிலையில், 100வது செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுற்றுப்பாதையை உயர்த்துவதற்கான ஆக்சிடரைசரை ஏற்கும் வால்வுகள் திறக்கப்படாததால், செயற்கைக்கோளை அதன் சுற்றுப்பாதையில் உயர்த்தும் செயல்பாடுகளை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மீது சுற்றும் வகையில் புவிசார் வட்ட சுற்றுப்பாதையில் என்விஎஸ்-02 செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட இருந்ததாகவும், ஆனால், தற்போது செயற்கைக்கோளில் உள்ள திரவ இயந்திரம் சரியாக செயல்படாததால் இந்தத் திட்டம் தாமதமாகலாம் அல்லது முற்றிலும் கைவிடப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நீள்வட்ட சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோளை புவிவட்ட சுற்றுப்பாதையில் செலுத்த மாற்று ஏற்பாடுகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.