சென்னை ராயப்பேட்டையில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீனிவாச பெருமாள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் அமைச்சர் சேகர் பாபு, கோயில் திருப்பணி குழு தலைவர் வசந்த் குமார், செயலர் ரவீந்திர சன்ன ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆகம விதிப்படி கோயிலின் விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள கும்ப கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருப்பணிக் குழு தலைவர் வசந்த் குமார், கொரோனா காலத்தில் இருந்த கட்டுப்பாடுகள் காரணமாக கோயில் குடமுழுக்கு விழா தாமதமானதாக தெரிவித்தார். குடமுழுக்கு நிகழ்வுக்காக 1 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய கோயில் செயலாளர் ரவீந்திர சன்ன ரெட்டி, சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பான முறையில் குடமுழுக்கு விழா நடைபெற்றதாக கூறினார். விழாவில் அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.