திருப்பரங்குன்றத்திற்கு இந்து அமைப்பினர் வருவதை தடுக்க அவர்களை போலீசார் மண்டபங்கள் மற்றும் வீட்டுக்காவலில் சிறை பிடித்து வைத்தனர்.
மதுரை மாநகரில் வெளிநபர்கள் பிரவேசிக்காத வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு வரும் பாஜகவினர் மட்டுமின்றி இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட 52 இந்து அமைப்புகளை ஆங்காங்கே தடுத்து நிறுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்து அமைப்பினர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். அதேபோல் சேலம் மாநகர் மாவட்ட பாஜக தலைவர் சசிகுமார், முன்னாள் தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட 16 நிர்வாகிகள் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மேலும் சேலம் மாவட்டத்தில் மட்டும் 92 பேர் வீட்டுக் காவல் மற்றும் அலுவலகங்களில் காவலில் வைக்கப்பட்டனர்.
திருச்சியில், பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் கெளதம் நாகராஜனை வீட்டுக் காவலில் போலீசார் சிறை வைத்தனர். திருப்பரங்குன்றம் செல்வதற்காக தனது வீட்டிலிருந்து வெளியே வந்த அவரை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டுக் காவலில் வைத்தனர்.