சென்னையில் ஆபத்தான முறையில் அரசு மாநகர பேருந்தை இயக்கியபடி ரீல்ஸ் பதிவிட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 3 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட அரசு மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான நடுத்தர மக்கள் இந்த போக்குவரத்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஒரு அரசு மாநகர பேருந்தை ஓட்டுநர் இயக்கிக்கொண்டிருக்க, அதன் நடத்துநர் அவர்கள் இருவரையும் சேர்த்து ரீல்ஸ் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். வீடியோ வைரலான நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை பொருட்படுத்தாமல் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியின்போது அஜாக்கிரதையாக செயல்படுவதாக பலரும் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த அந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநரை பணி நீக்கம் செய்யக்கோரி சம்மந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்துக்கு அரசு மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.