சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 10 சதவீதம் வரி விதித்த நிலையில், அதற்கு பழிவாங்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீது சீனா 15 சதவீதம் வரி விதித்துள்ளது.
அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிப்பதாக அவர் அறிவித்தார். இதைத்தொடர்ந்து டாலருக்கு நிகரான சீனாவின் செலாவணியான யுவானின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.
அமெரிக்காவின் வரி உயர்வுக்குப் பழிதீர்க்கும் வகையில், அந்நாட்டிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரி, இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்களுக்கு 15 சதவீதமும், கச்சா எண்ணெய், விவசாய கருவிகள் மற்றும் வாகனங்களுக்கு 10 சதவீதமும் வரி விதிப்பதாக சீன நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு வரும் 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதாரத்தில் வலிமைவாய்ந்த இருநாடுகளும் மாறி மாறி வரி விதிப்பதால், அவர்களுக்கு இடையே வர்த்தகப் போர் மூளும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதுமட்டுமன்றி, அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் கூகுள் நிறுவனம் மீதும் போலி செய்தி புகாரின்பேரில் விசாரணை நடத்த போவதாக சீனா அறிவித்துள்ளது.