மகா கும்பமேளா சனாதன தர்மத்தின் மிகப்பெரிய திருவிழாவாகும். உலகமெங்கும் இருந்து கோடிக்கணக்கான இந்துகள், திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வந்த வண்ணம் உள்ளனர். மகா கும்பமேளாவில் புனித நீராடலுடன், அன்னதானமும் சிறப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
புனிதத் தலமான பிரயாக்ராஜில், திரிவேணி சங்கமக் கரையில், சனாதன தர்மம் மற்றும் இந்து கலாச்சாரத்தின் மாபெரும் உற்சவமான மகா கும்பமேளா நடைபெறுகிறது.
கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்ப மேளா திருவிழா வரும் பிப்ரவரி 26ம் தேதி மாசி மகா சிவராத்திரியுடன் நிறைவடைகிறது.
இந்த மகா உற்சவத்தில், உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெவ்வேறு மொழி, சாதி, மதத்தைச் சேர்ந்த மக்களும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஒன்றாக திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுகிறார்கள். இந்து சாதுக்கள் மற்றும் துறவிகளிடம் ஆசி பெறுகிறார்கள்.
திருக்கோயில்களில் சாமி தரிசனம் செய்கிறார்கள். அன்னதானத்தில் ஒன்றாக அமர்ந்து பிரசாதம் சாப்பிடுகிறார்கள்.
ஒற்றுமை, சமத்துவம்,சகோதரத்துவம் என்ற சனாதன தர்மத்தின் உன்னத விழுமியங்களுடன் நடக்கும் உலகின் மிகப்பெரிய இந்து திருவிழா மகா கும்ப மேளா ஆகும்.
தொடங்கிய முதல் நாளில் மட்டும் ஒரு கோடிக்கும் மேலான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். இதுவரை மட்டும் 35 கோடிக்கும் மேலான பக்தர்கள் மகா கும்ப மேளாவுக்கு வந்துள்ளனர்.
கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. மகா கும்ப மேளாவுக்கு வந்து குவியும், கூட்டத்தை நெறிப்படுத்துவதிலும், மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும், உத்தர பிரதேச மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்காக, பிரயாக் ராஜ் நகர மக்கள்,தங்கள் இல்லங்களைத் திறந்தே வைத்துள்ளனர். வருகின்ற பக்தர்களுக்குத் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து உதவிகளைத் தாமாகவே முன்வந்து செய்கின்றனர்.
மகா கும்ப மேளா வெறும் இந்துமத விழா அல்ல என்றும், பாரத கலாச்சாரத்தின் கொண்டாட்டம் என்றும் கூறியுள்ளார். எனவே, ஆன்மீக அன்பர்களுக்குச் சேவை செய்ய தங்களால் முடிந்த அனைத்தையும் பிரயாக் ராஜ் மக்கள் செய்கிறார்கள்.
100 படுக்கைகள் கொண்ட ஹோட்டலை அலோக் சிங் என்பவர், பிரயாக் ராஜில் நடத்தி வருகிறார். அவர் தனது ஹோட்டலில் உள்ள அனைத்து அறைகளையும் பக்தர்கள் தங்கிச் செல்வதற்கு இலவசமாக கொடுத்திருக்கிறார்.
பல்கலைக்கழக வளாகமே கும்பமேளாவுக்கான ஒரு புனித இடமாக மாறியுள்ளது. அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும், அதிகாரிகளும், பக்தர்களுக்கு இலவசமாக உணவு அளித்து வருகின்றனர்.
பக்தர்களுக்கு இலவச மருத்துவ முகாம்களையும் நடத்தி வருவதாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரான மிஸ்ரா, தெரிவிக்கிறார்.
அதே போல், இஸ்லாமிய நிறுவனமான யாத்கர்-இ-ஹுசைனி இன்டர் கல்லூரி நிர்வாகம், பக்தர்களுக்கு தங்குமிடம், சிற்றுண்டி, தண்ணீர் மற்றும் கழிப்பறை வசதிகளையும் இலவசமாக செய்து தருகிறது.
மகா கும்பமேளாவும், கங்கையும் ஆண் ,பெண், சாதி, இனம்,மொழி, மதம், நாடு, என யாரையும் வேறுபடுத்தி பார்ப்பதில்லை.
கங்கை, யமுனை, சரஸ்வதி கூடும் திரிவேணி சங்கமம் உள்ள புண்ணியத் தலமாகும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்கிறது இந்து சாஸ்திரம்.
ஆகவே, ஒவ்வொருவரும் கடவுளுக்குச் சேவை செய்வதாக நினைத்து, கும்ப மேளாவுக்கு வரும் பக்தர்களுக்குச் சேவை செய்கிறார்கள்
உண்மையில், மகா கும்ப மேளா, பாரதத்தின் ஒற்றுமையை , சனாதனத்தின் பெருமையைப் பறை சாற்றும் திருவிழாவாக உள்ளது.