டெல்லியில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஆம் ஆத்மியும், காங்கிரசும் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றன.
மறுபுறம் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்து விடும் நோக்கில் பாஜக களம் காண்கிறது. இதனால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 699 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர்.
சுமார் 13 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 220 கம்பெனி துணை ராணுவப் படையினர், 19 ஆயிரம் ஊர்காவல் படையினர், 35 ஆயிரம் டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.