சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, சேலம் வழியாக தென் மாவட்டங்களுக்கு குட்கா, ஹான்ஸ், பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த டிசம்பர் 20 -ம் தேதி கொண்டலாம்பட்டியில் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்தும், டிசம்பர் 28 -ம் தேதி அம்மாபேட்டையில் விபத்தில் சிக்கிய வாகனத்திலிருந்தும் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில், மற்றவர்களை கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், வாகனங்கள் விபத்தில் சிக்கும் போதுதான் குட்காவை போலீசார் பறிமுதல் செய்கின்றனர் என்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, போதைப் பொருட்கள் கடத்துபவர்களை அடையாளம் கண்டு கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.