கொடைக்கானல் நட்சத்திர ஏரிக்கு திமுக ஆட்சியில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் குறிப்பிட்ட காலத்திற்குள் வேலைகளை ஒப்பந்ததாரர்கள் முடிக்கவில்லை எனவும் தரமற்ற முறையில் பணிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மைய பகுதியில் அமைந்துள்ளது இந்த நட்சத்திர ஏரி. சுமார் ஆறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட ஏரிதான் இப்போது சுற்றுலா பயணிகளை ஏக்கப் பெருமூச்சு விட வைத்துள்ளது.
திமுக ஆட்சியில் கொடைக்கானல் ஏரியை தூய்மைப்படுத்துவதற்கும் அழகு படுத்துவதற்கும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பல மாதங்களாக வேலை நடைபெற்று வருகிறது.
என்றாலும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியத்தால் ஆமை வேகத்தில் பணிகள் நடப்பதாகவும் குறிப்பட்ட காலத்தில் பணிகள் முடியவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தும் பொருட்கள் தரமற்றவைகளாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தும் எம் சாண்ட் மற்றும் சிமெண்ட் அப்பகுதியில் நடந்து செல்பவர்கள் கையினால் தொடும்போதே கீழே உதிர்ந்துவிழும் நிலையில் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுஒருபுறமிருக்க கொடைக்கானல் நட்சத்திர ஏரிப் பகுதியில் நடைபாதை பணி முடிந்து வேறொரு பகுதியில் பணி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வேலை முடிந்த நடைபாதையானது சேதம் அடைந்து விட்டது. எனவே எந்த லட்சணத்தில் வேலை நடந்திருக்கிறது என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் ஏரியை சுற்றி அழகாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்த நிலையில் நகராட்சியில் பொறுப்பில் உள்ள திமுக-வினரும் நகராட்சி ஆணையாளரும் வேலி அனைத்தையும் அகற்றி தரமற்ற வேலிகளை அமைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்பு வேலியானது கொடைக்கானல் ஏரியின் அழகை மறைக்கும் வகையில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் தூரமாக நின்று பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஏரியை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் தெரு விளக்குகள் சரியாக எரியாததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தடுப்பு வேலியை தாண்டி நடைபயிற்சி செல்பவர்கள் தவறி விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் குவியும் கொடைக்கானல் நட்சத்திர ஏரி, நட்சத்திர அந்தஸ்தை இழந்து கொண்டிருக்கிறதோ என்ற கவலை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தரமான பராமரிப்பு பணிகள் மூலம் நட்சத்திர ஏரியை மீண்டும் ஒளிர வைக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.