கோவை மாவட்டம், கோவில்பாளையத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடை பார்களில் கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்கப்படுகின்றன.
கோவில்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயங்கும் இரும்பு தொழிற்சாலைகள், நூற்பாலைகளில் அதிக அளவிலான கூலி தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களை குறிவைத்து, அங்குள்ள அரசு டாஸ்மாக் மதுபான கடையின் பார்களில் கள்ளத்தனமாக இரவு, பகல் நேரங்களில் மதுபான விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் கூலி தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிப்புக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து புகாரளிக்கப்பட்டும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் பார் உரிமையாளர்களுக்கே ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.