அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதாக வெளியேற்றப்பட்ட 104 இந்தியர்கள் அந்நாட்டு விமானப் படை விமானத்தில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர்.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்காவில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த 104 இந்தியர்கள் அடையாளம் காணப்பட்டு, டெக்சாஸில் இருந்து விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
11 விமான பணியாளர்கள் மற்றும் 45 அமெரிக்க அதிகாரிகளுடன் டெக்சாஸ், சான் ஆன்டோனியோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் குரு ராம்தாஸ் விமான நிலையத்தை பிற்பகலில் வந்தடைந்தது.
அதில் வந்தவர்களில் 30 பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தலா 33 பேர் குஜராத் மற்றும் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நாடு திரும்பியவர்கள் மீது குற்றப் பின்னணி இருந்தால், கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர் என போலீஸார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.