கரூர் அருகே வடமாநில குட்கா வியாபாரிகளிடம் பறிமுதல் செய்த பணத்தை பதுக்கிய விவகாரத்தில் காவல் ஆய்வாளர் உட்பட 8 பேரை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி திருச்சி டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் இருந்து கரூருக்கு காரில் புகையிலை பொருட்கள் கடத்திவரப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனை அடுத்து, வெங்கமேடு அருகே தனிப்படை உதவி ஆய்வாளர் உதயகுமார், தாந்தோணிமலை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமார் உள்ளிட்டோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த காரில் எடுத்தவரப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து பதுக்கி விட்டதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, விசாரணை நடத்த திருச்சி டிஐஜி வருண்குமார் உத்தரவிட்ட நிலையில், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர்கள் உதயகுமார், சித்ராதேவி மற்றும் 5 காவலர்கள் உட்பட 8 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.