காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகே மதுபோதையில் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாகனங்களை அடித்து நொறுக்கிய போக்குவரத்து காவலரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மவுலிவாக்கத்தைச் சேர்ந்த ஆனந்த் கோயம்பேட்டில் போக்குவரத்து காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் மதுபோதையில் அந்த பகுதி குடியிருப்புவாசிகளின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியதுடன், வீடுகளுக்குள் புகுந்து பொருட்களைத் தூக்கி கீழே வீசியிருக்கிறார்.
மேலும், இரவு நேரங்களில் பெண்கள் இருக்கும் வீடுகளின் கதவைத் தட்டி அரை நிர்வாணமாக நின்று அட்டூழியம் செய்ததாகவும் கூறப்படுகிறது. அவர் மீது மாங்காடு போலீஸார் நடவடிக்கை எடுக்காத நிலையில், குன்றத்தூர் – போரூர் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆனந்தை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றபோது அவர்களிடம் அவர் சொடுக்கு போட்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
விசாரணையில், ஆனந்துக்கு ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்தான நிலையில், இரண்டாவதாக திருமணம் முடிவாகி, அதுவும் நின்றுபோனதால் விரக்தியில் இவ்வாறு செய்தது தெரியவந்தது.