ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக, சென்னை மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பருவநிலை மாறுபாடு மற்றும் கடும் குளிர் காரணமாக ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சல் பரவி வந்தது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம், கசத்தோப்பு பகுதியை சேர்ந்த 80 வயதான முதியவர் சுப்பிரமணி என்பவர் கடுமையான காய்ச்சல் காரணமாக, கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆம்பூரிலும், பின்பு வேலூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கு ஸ்க்ரப் டைப்ஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, மின்னூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சுகாதாரத்துறையினர் சுப்பிரமணி வீட்டைச் சுற்றி நோய் தடுப்பு மருந்து தெளித்தனர். மேலும், பெரியாங்குப்பம் பகுதியில் மருத்துவ சிறப்பு முகாம் நடத்தினர். ஆனால், கிராமம் முழுவதும் நோய் தடுப்பு மருந்து தெளிக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.