மேற்கு பெய்ஜிங்கில், உலகின் மிகப் பெரிய போர்க்கால இராணுவக் கட்டளை மையத்தை, சீனா கட்டிவருகிறது. “பெய்ஜிங் இராணுவ நகரம்” என்று அழைக்கப்படும், சீனாவின் இந்த இராணுவ கட்டளை மையம், அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனை விட 10 மடங்கு பெரியதாகும். சீனாவின் இராணுவ விரிவாக்கத் திட்டத்தின் பின்னணி என்ன ? சீனா யாருடன் போருக்குத் தயாராகிறது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சீன கம்யூனிச அரசின் நிறுவனரான மா சே துங், உள்கட்சித் தலைமைக்குச் சவால் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வால், ‘குறைவான ஆயுதம், குறைவான படைவீரர்கள்’ என்ற கோட்பாட்டில், ராணுவத்தைப் பலவீனமாகவே வைத்திருந்தார். அதன் காரணமாகவே, குப்பை கழிவு ராணுவம் என்று, சொந்த நாட்டு ராணுவத் தளபதிகளாலேயே சீன இராணுவம் விமர்சனத்துக்கு உள்ளானது.
வளைகுடாப் போரும், தைவான் விவகாரமும் ராணுவத்தை தொழில்முறையில் மேம்படுத்தியாக வேண்டியதன் அவசியத்தை சீன அரசுக்கு உணர்த்தின.
1990-களுக்கு முன் சீனாவின் ராணுவ பட்ஜெட், தைவானின் ராணுவ பட்ஜெட்டை விட மிக குறைவாகவே இருந்தது. ஆனால், வளைகுடா போருக்குப் பிறகு, ராணுவ பட்ஜெட்டை அதிகரித்தது சீனா.
2012ம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், 2013ம் ஆண்டு, சீனாவின் அதிபராகவும் ஜி ஜின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து, கட்சியிலும், இராணுவத்திலும், தனது பிடியை சீன அதிபர் வலிமைப்படுத்தியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில், சீன மக்கள் விடுதலை இராணுவத்தை உலகளாவிய செல்வாக்கு மிக்க நிலைக்கு உயர்த்தும் நோக்கில் நவீனமயமான பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. தொடர்ந்து, இராணுவத்துக்கு அதிகம் செலவழிக்கும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தைச் சீனா பிடித்துள்ளது.
ஓராண்டுக்கான சீனாவின் ராணுவ பட்ஜெட், 17 இந்திய -பசிபிக் நாடுகளின் ராணுவங்களுக்கு அளிக்கப்படும் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீட்டை விடவும் அதிகமானதாகும்.
சீனாவின் ராணுவப் பட்ஜெட் கடந்த பத்து ஆண்டுகளில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது. 2013 ஆம் ஆண்டில் 131 பில்லியன் அமெரிக்க டாலரிலிருந்து, 2023 ஆம் ஆண்டில் 224 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியை விட இருமடங்கு அதிகமாக ராணுவத்துக்குச் சீன அரசு செலவழிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தான், சீன மக்கள் விடுதலை இராணுவம், மேற்கு பெய்ஜிங்கில் ஒரு பெரிய இராணுவ கட்டுப்பாட்டு மையத்தை உருவாக்கி உள்ளது. சீன தலைநகருக்குத் தென்மேற்கே 30 கிலோமீட்டர் தொலைவில், சுமார் 1,500 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த இராணுவ தலைமையகம் உருவாகி வருகிறது. கடந்த ஆண்டு, இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப் பட்டதாக தெரிகிறது. இதற்காக, இந்தப் பகுதிக்கு மிக அருகில் உள்ள கிங்லோங்கு நகரத்தில் அனைத்து வீடுகளும் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் இந்த பிரம்மாண்ட இராணுவ நகரத்தின் செயற்கைக்கோள் படங்கள், அமெரிக்க உளவுத்துறையால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்த கட்டுமானப் பணிகளில், சுமார் 100 கிரேன்கள் இயங்குவதைப் புகைப் படங்கள் காட்டுகின்றன. இந்த மாபெரும் இராணுவ நகரத்தில், இரகசிய சுரங்கப்பாதைகள் உருவாக்கப் படுகின்றன.
சீன இராணுவத்தின் அணுசக்தி போர்த் திறனை மேம்படுத்துவதற்காகவே, இந்த இராணுவ நகரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அணுசக்தி யுத்த காலத்தில் சீனத் தலைவர்களையும், இராணுவத் தளபதிகளையும் பாதுகாக்க பிரத்யேக பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன
பிரமாண்டமான கட்டுமானப் பணிகளில் சீன இராணுவத்தினர் ஈடுபடவில்லை. இந்தப் பகுதிக்கு அருகில் வருவதற்குப் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. இந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்தப் பகுதியைப் புகைப்படங்கள் எடுக்கவும். ட்ரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளன. மேலும் அருகிலுள்ள மலையேற்றப் பாதைகள் மற்றும் சுற்றுலா தளங்களும் மூடப் பட்டுள்ளன.
ஏற்கெனவே, பெய்ஜிங் தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை நீண்ட காலமாகவே பலப்படுத்தி வருகிறது. 1,500 அணு ஆயுதங்களைச் சீனா வைத்துள்ளது. அணு ஆயுதங்களைச் சேமித்து வைப்பதற்காக, பெய்ஜிங் தென்மேற்கு நகரமான மியான்யாங்கில் ஒரு பெரிய அணு இணைவு மையத்தையும் சீனா கட்டி வருகிறது.
உலகின் முன்னணி ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளையும் ஏராளமாக சீன இராணுவம் வைத்திருக்கிறது. மேலும் அமெரிக்க நிலப்பகுதியை எளிதில் அடையக்கூடிய சுமார் 400 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சீனா வைத்துள்ளது.
போக்குவரத்து மற்றும் அல்லது வணிக விமான நிலையங்கள் உட்பட சீனா 3,000 க்கும் மேற்பட்ட மொத்த விமான நிலையங்களை உருவாக்கி உள்ளது. இதில் பெரும்பாலானவை தைவான் ஜலசந்தியின் 1,000 நானோமீட்டருக்குள் உருவாக்கப் பட்டுள்ளன.
முன்பெல்லாம், அமெரிக்க இராணுவத்துடன் ஒப்பிடும்போது சீன இராணுவத்தின் ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தது. இப்போது, அந்த ஒருங்கிணைப்பை மிக நேர்த்தியாக சீனா வசப்படுத்தியுள்ளது.
2027 ஆம் ஆண்டில் மக்கள் விடுதலை இராணுவத்தின் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. அதற்குள் தைவானைத் தாக்கும் திறனை வளர்த்துக் கொள்ளவும், மிகப் பெரிய போருக்குத் தயாராக இருக்கவும் ராணுவத்துக்குச் சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். கூடவே,2049 ஆம் ஆண்டுக்குள் சீனாவின் தேசிய மறுமலர்ச்சி குறித்த தனது தொலைநோக்குப் பார்வைக்கு “உலகத் தரம் வாய்ந்த இராணுவம்” அவசியம் என்பதையும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தெளிவுப் படுத்தியுள்ளார்.
தாக்குதலுக்குத் தயாராகும் சீனாவை சமாளிக்கும் இராணுவ முன்னேற்பாடுகளில் அமெரிக்காவும் தீவிரம் காட்டி வருகிறது.