அரை நூற்றாண்டாக சென்னையின் அடையாளமாகவும் லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயமாகவும் திகழ்ந்த சென்னை உதயம் தியேட்டரை இடிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. உதயம் தியேட்டர் உடனான ரசிகர்களின் நினைவலைகளை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
சென்னையில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு இருக்கும் முக்கியமான இடங்களில் ஒன்று தான் இந்த உதயம் தியேட்டர். 1980 மற்றும் 90களில் பிறந்த பலரின் வாழ்க்கையின் அங்கமாகவே விளங்கிய உதயம் தியேட்டரில் தங்களின் இதயங்களை தொலைத்தவர்கள் ஏராளம் எனலாம்.
அரை நூற்றாண்டாக சென்னையின் தவிர்க்க முடியாத அடையாளமாகவும், சென்னை வாசிகளின் விருப்பத்திற்குரிய இடமாகவும் திகழ்ந்த உதயம் தியேட்டரை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு வளாகம் கட்டுவதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. உதயம் தியேட்டரில் இதயத்தை தொலைத்த பலர் இனி இடிந்து கிடக்கும் இடிபாடுகளுக்குள் தான் தங்களின் இதயங்களை தேட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அசோக் நகரை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் உதயம் தியேட்டர் இடிக்கப்படும் காட்சிகளை பார்த்து தங்களின் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். அவர்களின் சோகக் கதை சமூகவலைதளங்கள் வரை நீள்கிறது.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல வெற்றிப் படங்களை ரீலீஸ் செய்த பெருமையையும், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி லட்சக்கணக்கான மக்களின் இதயங்களை கொள்ளையடித்த உதயம் தியேட்டரின் கட்டடங்கள் இடிக்கப்பட்டாலும் அதன் புகழ் ஒவ்வொருவரின் இதயங்களிலும் நீங்கா வடுவாக என்றென்றும் பதிந்திருக்கும்.