திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வடக்கு தையக்காரத் தெருவில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், அதிகாலை மனிதக்கழிவை ஒரு பாலித்தீன் பையில் எடுத்து வந்த மர்மநபர்கள் தண்ணீர் தொட்டியில் வீசி சென்றுள்ளனர்.
இதனை கவனித்த அப்பகுதி மக்கள் 20வது வார்டு கவுன்சிலர் சங்கருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கவுன்சிலரின் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் தண்ணீரில் கிடந்த மனிதக்கழிவை அகற்றிவிட்டு தொட்டியை சுற்றி பிளீச்சிங் பவுடர் போட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரவியதை அடுத்து கவுன்சிலர் சங்கரை சூழ்ந்து சரமாரியாக கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், நீர்த்தேக்க தொட்டியை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.