திருச்சி அருகே நிலப்பிரச்சினை காரணமாக ஹெல்மெட்டால் தாக்கப்பட்ட பெண் உயிரிழந்த நிலையில், அவரது இறப்புக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே அத்தாணி கிராமத்தில் வசித்து வரும் ரகுநாத் என்பவரது மனைவி ஜீவா என்பவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மாலதி என்பவருக்கும் இடையே, நிலப்பிரச்சினை காரணமாக மோதல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க ஜீவாவும், அவரது கணவரும் சென்றபோது, மாலதியின் மகன் வசந்தகுமார் உள்ளிட்ட சிலர் வழிமறித்து ஹெல்மெட் உள்ளிட்டவையால் தாக்கியுள்ளனர்.
இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜீவா, குளித்தலையில் உள்ள தனது தாயார் வீட்டிற்கு சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது சடலத்தை அத்தாணி கொண்டு வந்தபோது, அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஜீவாவின் இறப்புக்கு நியாயம் கேட்டும், அவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் கோரி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜீவா மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.