இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்த முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலங்களவையில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்ததாக 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டு அந்நாட்டு ராணுவ விமானத்தில் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
அப்போது அவர்கள் கைவிலங்கிட்டு அழைத்து வரப்பட்டது பூதாகரமாக வெடித்தது. இதற்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் நெறிமுறைகளுக்கு உட்பட்டுதான் இந்தியர்களின் கையில் விலங்கிடப்பட்டதாக விளக்கமளித்தார்.
அதிலும் ஆண்கள் கையில் மட்டும்தான் விலங்கிடப்பட்டதாக கூறிய அவர், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டார். அத்துடன் இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்கா அனுப்பி வைத்த முகவர்களைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதேபோல மக்களவையிலும் அவர் விளக்கமளித்தார். அப்போது எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக இந்தியர்களின் கையில் விலங்கிடப்பட்டதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால், சசி தரூர் உள்ளிட்டோர் கையில் விலங்குடன் பங்கேற்றனர்.