கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
2019-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரையின்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து அவதூறாக பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் தரப்பினர் புகார் அளித்தனர்.
காங்கிரஸ் தரப்பிலான புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, சீமான் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதால் வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
வழக்கில் இருந்து விடுவிக்க எந்த ஆதாரங்களும் இல்லை எனக் கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதே நேரத்தில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் குறித்து பேசியது தேர்தல் விதிமீறலில் வராது எனக்கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற சீமானின் கோரிக்கையை நிராகரித்து ஆணையிட்டார்.
மேலும், தலைவர்கள் குறித்து பேசும் போது நிதானத்துடன் பேச வேண்டும் என சீமானுக்கு நீதிபதி அறிவுரை வழங்கினார்.