சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி வரும் 20-ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆஜரான நிலையில், வழக்கில் முதல் சாட்சியான வங்கி மேலாளர் ஹரிஷ் குமாரை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வரும் 20-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு விசாரணையை அன்றைய தினத்துக்கு ஒத்திவைத்தார்.