இந்தியாவின் AI வளர்ச்சி நம்பமுடியாததாக இருப்பதாகவும், உலக AI துறையின் முதலிடத்தை விரைவில் இந்தியா பிடிக்கும் என்றும் OpenAI நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார். மேலும், உலகளவில் இரண்டாவது பெரிய AI சந்தையாக இந்தியா உள்ளது என்றும் கூறியுள்ளார்.
அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
AI துறையில் இந்தியா குறிப்பிடத் தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை வலுப் படுத்தவும், தொழில் நுட்ப வளர்ச்சிக்கான நாட்டின் தொலை நோக்குப் பார்வையை மேம்படுத்தவும்,AI சிறப்பு மையங்களை உருவாக்க அரசு முடிவு செய்திருந்தது.
கடந்த சனிக் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்ட நிதிநிலை அறிக்கையில் இந்தியாவில் AI தொழில்நுட்பங்களை மேம்படுத்த 10, 738 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. AI தொழில்நுட்பத்தை பயிற்சி செய்யவும், மேம்படுத்தவும், உயர் செயல்திறன் கொண்ட GPU மற்றும் தரவு மையங்களை ஏற்படுத்தவும் இந்த நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.
இந்திய வணிகங்களில், 23 சதவீதம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டில், இந்த எண்ணிக்கை 75 சதவீதத்துக்கும் மேலாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
கூடுதலாக இந்தியாவில் இணைய நுகர்வோரில்,50 சதவீதத்துக்கும் மேல் OpenAI ChatGPT யைப் பயன்படுத்துகின்றனர்.ChatGPTக்கு அடுத்து, ஜெமினி, க்வென், DEEP SEEK போன்ற AI க்களை இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர்.
இந்தச் சூழலில், இன்னும் 6 மாதங்களுக்குள், அமெரிக்காவின் முன்னணி AI நிறுவனங்களை விடவும், மேம்பட்ட திறனுடன் இந்திய AI தளம் உருவாக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
AI வளர்ச்சியை இயக்கும் திறன் கொண்ட ஸ்டார்ட்அப்களை அடையாளம் காண்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்றும் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷணவ் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், OpenAI தலைமை நிர்வாக அதிகாரி ஆல்ட்மேனின் இந்தியா வருகை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
விரிவான செயற்கை நுண்ணறிவு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான இந்தியாவின் லட்சியத் திட்டங்கள் குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,OpenAI தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை சந்தித்துள்ளார். இந்திய சந்தைக்கான OpenAI திட்டங்கள் குறித்து, நாட்டின் சில முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனத் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் சாம் ஆல்ட்மேன் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
IndiaAI மிஷன் திட்டத்தில், இந்திய மொழிகளைப் பயன்படுத்தி உள்நாட்டு சூழலுக்கு ஏற்றவாறு பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவுக்கான பிரத்யேக செயற்கை நுண்ணறிவை இந்தியா உருவாக்கி வருகிறது.
முதல் கட்டமாக, 10,000 GPU-களின் கணக்கீட்டு வசதியுடன் தொடங்குகிறது. விரைவில், மீதமுள்ள 8693 GPU-கள் சேர்க்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் செலவில் 40 சதவீதத்தை மானியமாக அரசு வழங்கும் என்றும் கூறப் பட்டுள்ளது.
உலக அளவில், 1 மணி நேர AI பயன்பாட்டுக்கு 3 அமெரிக்க டாலர் வரை வசூலிக்கப்படும் நிலையில், இந்திய AI ஒரு மணி நேரத்துக்கு100 ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மலிவு விலையிலும் பாதுகாப்பானதாக உருவாக்கப்படும் இந்திய AI, உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், சர்வதேச அளவில், AI தீர்வுகளுக்கான சிறந்த இடமாக இந்தியாவை மாற்றும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஆண்டில், இந்தியாவில் OpenAI நுகர்வோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக கூறிய OpenAI நிறுவனர், உலக AI துறையின் தலைமையை இந்தியா ஏற்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறது
பிப்ரவரி 10-11 ஆகிய தேதிகளில் பிரான்ஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு (AI) செயல் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிகலந்து கொள்கிறார்.
இதற்கிடையில், இந்திய சேவையகங்களில் OPEN SOURCE AI மாதிரிகளை ஹோஸ்ட் செய்ய மத்திய அரசு தயாராகி வருகிறது.