DeepSeek செயலியின் தரவு தனியுரிமை கொள்கைகள், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. DeepSeek வெற்றிக்குப் பின்னணி என்ன ? அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் DeepSeek செயலிக்கு தடை விதித்தது ஏன்? அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
DeepSeek என்ற சொல் உலக அளவில் புயலைக் கிளப்பி இருக்கிறது. சீனாவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு செயலி, AI தொழில்நுட்பத் துறையில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அறிமுகமான உடனேயே, ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டார் இரண்டிலும் பதிவிறக்கங்களில் உச்சத்தைத் தொட்டு புதிய சாதனை படைத்தது.
அமெரிக்க தொழில்நுட்ப பங்கு சந்தையான நாஸ்டாக்கை DeepSeek சீர்குலைத்தது. முன்னணி செமிகண்டக்டர் நிறுவனமான என்விடியா சந்தை மதிப்பில் சுமார் 600 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பை DeepSeek ஏற்படுத்தியது. இது அமெரிக்க வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப் பெரிய இழப்பாகும்.
லியான் வென்ஃபெங்கின் தலைமையிலான சீன நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள DeepSeek AI மற்றொரு AI செயலி அல்ல. முக்கியமாக DeepSeek செயலி RI என்ற கணினி மொழியில் எழுதப் பட்டதாகும்.
இது ஒரு புறம் இருந்தாலும், குறைந்த பட்ஜெட் என்பது தான் DeepSeek யை மற்ற AI செயலிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. OpenAI Chat GPT தயாரிக்க பல லட்சம் கோடிகளை செலவழித்துள்ள நிலையில், DeepSeek செயலியை உருவாக்க வெறும் 6 மில்லியன் அமெரிக்க டாலர் தான் செலவாகி உள்ளது.
குறைந்த செலவில் உருவாக்கப் பட்ட காரணத்தால், DeepSeek செயலி பாதுகாப்பு அம்சங்கள் முறையாக இல்லை என்று கூறப்படுகிறது. OPEN SOURCE செயலிகளான Meta, Llama மற்றும் Qwen விலிருந்து CODING மாதிரிகளை திறமையாக, மாற்றியமைத்து DeepSeek உருவாக்கப் பட்டுள்ளது. இதனால், DeepSeek-ல் சில முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை.
DeepSeek செயலி சைபர் பாதுகாப்பைப் பொறுத்தவரை தரவரிசையில் மிகவும் கடைசியில் உள்ளது என்று, AI MODEL -களை மதிப்பிடும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான LatticeFlow AI தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு என்பது எந்த கேள்விக்கும் பதில் அளிக்கக் கூடியதாகும். இங்கே தான் பாதுகாப்பு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக, செய்யக் கூடாத செயல்களைச் செய்வதற்கு எந்த செயற்கை நுண்ணறிவும் வழிகாட்டக் கூடாது.
வெடிகுண்டைத் தயாரிப்பது எப்படி? ஒரு காரை ஓட்டுவது எப்படி? சிறையில் இருந்து தப்பிப்பது எப்படி ? போன்ற கேள்விகளுக்குப் படிப்படியாக செயற்கை நுண்ணறிவு பதிலளித்தால் என்னவாகும் என்று யோசிக்க வேண்டியுள்ளது. இதுமட்டுமில்லாமல், பெரிய வணிக நிறுவனங்களின் முக்கிய தரவுகளையும் செயற்கை நுண்ணறிவு பரவலாக்கி விடும் அபாயமும் உள்ளது என்கிறார்கள் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
குறிப்பாக கடந்த ஆண்டில், உலக அளவில், 50 பெரிய வங்கிகள் தங்கள் ஜெனரேட்டிவ் AI பயன்பாட்டை சுமார் 300 பயன்பாடுகளாக அதிகரித்துள்ளன. இதில் 25 சதவீதத்துக்கும் குறைவான நிறுவனங்களே, நிறுவனத்தின் செயல் திறன் மற்றும் வருவாய் சம்பந்தமான கேள்விக்களுக்குப் பதிலளிக்க AI-க்கு தடை விதித்துள்ளன.
இந்த பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தவில்லை என்பதாலேயே, மிக குறைந்த விலையில் DeepSeek AI யை உருவாக்க முடிந்திருக்கிறது.
அமெரிக்காவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ள சீன அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்துக்கு நுகர்வோர் உள்நுழைவு தகவல்களை அனுப்பக்கூடிய கணினி குறியீடு இருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சீன அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் DeepSeek AI-யை இணைக்கும் குறியீட்டை முதலில் கனடாவைச் சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான ஃபெரூட் செக்யூரிட்டி தான் கண்டுபிடித்தது,
மேலும், DeepSeek-ன் தனியுரிமைக் கொள்கையில், சீனாவில் உள்ள சேவையகங்களில் தரவைச் சேமிப்பதை ஒப்புக் கொள்கிறது. ஆனால், DeepSeek நுகர்வோரின் தரவுகள், நேரடியாக சீன அரசுடன் இணைக்கப்பட்டுள்ளது தெரிகிறது.
தனியுரிமைக் கொள்கைகளைக் காரணம் காட்டி, DeepSeek AI-யைத் தடை செய்த முதல் நாடு இத்தாலி யாகும். தேசிய தகவல் பாதுகாப்புக்கு ஆபத்து என்று முத்திரை குத்தியுள்ள தைவான் அரசும் DeepSeek AI-க்கு தடை விதித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவும் DeepSeek AI-யைத் தடை செய்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம், அமெரிக்க கடற்படை, பென்டகன் மற்றும் நாசா, தனது ஊழியர்கள், DeepSeek AI-யைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளன. டெக்சாஸ் மாநில ஆளுநர் DeepSeek AI க்கு தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தியாவைப் பொறுத்தவரை இணையத்தை படுத்துவோரில் 50 சதவீதம் பேர் செயற்கை நுண்ணறிவு தளங்களைப் பயன்படுத்துகின்றனர். அதிலும் ChatGPT மிகவும் பிரபலமாக உள்ளது என்று கூறப்படுகிறது.
மத்திய நிதித்துறை அமைச்சகம், ChatGPT மற்றும் DeepSeek போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளைப் பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அரசு ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு இந்த AI Tools ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.