திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை பேசும் ராகுல் காந்தி காங்கிரஸை வழிநடத்துவது பேரபாயம் என்று பா.ஜ.க. தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று திமுக நடத்திய போராட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா என தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மொழிகள், கலாசாரங்கள், பாரம்பரியங்கள், வரலாறுகளை மதிக்க வேண்டும். ஆர்எஸ்எஸ் தனது கருத்தான, ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம், ஒரு மொழி என்பதை அடைவதற்காக அரசியலமைப்பை தாக்குகிறது.
யுஜிசி வரைவு நெறிமுறைகள் வெறும் கல்வி சார்ந்த நகர்வல்ல, அது தமிழகத்தின் வளமான மரபின் மீதும், இந்தியக் கூட்டாட்சியியலின் அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்” என்று தெரிவித்துள்ளார்.
கல்வி என்பது மத்திய, மாநில அரசுகளுக்கும் அதிகாரம் கொண்ட பொதுப்பட்டியலில் உள்ளது. இதில் மாநில அரசு மட்டும் தன்னிச்சையாக பல்கலைக்கழகங்களை கட்டுக்குள் வைத்திருக்க கூடாது என்பதற்காக, புதிய விதிகளை யுஜிசி உருவாக்கியுள்ளது. அதுபற்றி கருத்துகளை கேட்டுள்ளது.
அதில் திருத்தங்களை மாநில அரசுகள் தெரிவிக்கலாம். ஆனால், இதை வைத்து திமுக தனது பிரிவினை அரசியலை மேலும் கூர்தீட்டுகிறது. இந்தியா என்பது நாடல்ல, மாநிலங்களின் ஒன்றியம் என்பது திமுகவின் பிரிவினை சித்தாந்தம்.
அதையே ராகுல் காந்தி திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார். ‘தேசம் முதலில்’ என்பதுதான் பாஜகவின் கொள்கை. திமுகவின் பிரிவினை சித்தாந்தத்தை முன்மொழிபவர், தேசிய கட்சியான காங்கிரஸை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பது பேரபாயம்.
தேசத்தை இணைப்பதே ஆர்எஸ்எஸ், பாஜகவின் கொள்கை!
மொழி, மதம், இனம், ஜாதி, வேறுபாடுகளை கடந்து அனைவரும் பாரதியர்கள் என்று உணர வேண்டும் என்பதற்காக 100 ஆண்டுகளாக செயல்படும் இயக்கம் ஆர்எஸ்எஸ். மக்களை இணைப்பதுதான் ஆர்எஸ்எஸ்ஸின் பணி. ஆனால், ‘வட மாநிலங்கள் – தென் மாநிலங்கள்’, ‘மாநில மொழிகள் – இந்தி’, ‘இந்துக்கள் – சிறுபான்மையினர்’ என மக்களைப் பிரித்து வருகிறார் ராகுல் காந்தி என்று தெரிவித்துள்ளார்.
திமுகவினர் பாஜகவை விமர்சிக்கும் போதெல்லாம் உத்தரப்பிரதசம், பீகார் மாநில மக்களோடு ஒப்பிட்டு கேலி செய்கிறார்கள். ஆனால், உத்தரப்பிரதேசத்திலிருந்து எம்.பியாக இருக்கும் ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும், கொஞ்சமும் கூச்சமில்லாமல் திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதைவிட உத்தரப்பிரதேச மக்களை யாரும் அவமதிக்க முடியாது.
காங்கிரஸ் குறிப்பாக நேரு குடும்பத்தினர் மத்தியில் நடத்திய சர்வாதிகார ஆட்சியில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை டிஸ்மிஸ் செய்தார்கள். 1975 முதல் 1977 வரை எமர்ஜென்சியை அமல்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்தை முடக்கியது காங்கிரஸ் கட்சி. இப்படி, அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்தவர்கள், இன்று, ஆர்எஸ்எஸ், பாஜக மீது கல்லெறிகிறார்கள்.
யார் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்கிறார்கள், யார் மாநிலங்களை சமமாக நடத்துகிறார்கள், யார் அனைத்து மொழிகள், கலாசாரத்தை, உரிமைகளையும் மதித்து நாட்டை இணைக்கிறார்கள் என்பதை மக்கள் நன்கறிவார்கள். பிரிவினை பேசும் திமுகவையும், அந்த வழியில் பயணிக்கும் ராகுல் காந்தியையும் இந்திய மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.