சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை மறியல் ஈடுபட முயன்ற மக்களை சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறைகளை கேட்டறிந்தார்.
தலைவாசல் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் பலனில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடந்த வாரம் போராட்டம் நடத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்த திரண்டனர். அப்போது அவ்வழியாக காரில் சென்ற எடப்பாடி பழனிசாமி, மக்களை சந்தித்தார்.
அவரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், இணைப்பு சாலை அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டால் போலீசார் தங்களை தாக்குவதாக புகார் அளித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க முயற்சிப்பதாக கூறி அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.