மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாதென உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது
இந்த மனு மீதான விசாரணையில், மசோதாவை திருப்பி அனுப்பும்போது அதில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆளுநர் தரப்பு வழக்கறிஞர், துணைவேந்தர் நியமனத்தில் தமிழக அரசு மேற்கொண்ட நடைமுறை மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது என்றும்…
இதுபோன்ற சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளவைகளுக்கு எப்படி ஆளுநர் ஒப்புதல் அளிப்பார்? எனவும் தெரிவித்தார்.
இதேபோல் பல்கலைக் கழக செயல்பாடுகள் குறித்து ஆளுநர் தலைமையில் நடைபெற இருந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என சில துணை வேந்தர்களை அரசு அணுகியது என்றும் ஆளுநர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
பல்கலைக் கழக மானியக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள துணைவேந்தர்களின் பொறுப்பை மாநில அரசு ஆக்கிரமிக்க முயல்வதாகவும் ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க கூடாது என தெரிவித்து வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.