ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய நபர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், கூச்சலிட்டதால் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாகவும் படுகாயமடைந்த கர்ப்பிணி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை – திருப்பதி செல்லும் விரைவு ரயிலின் பெண்கள் பெட்டியில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி போலீசாருக்கு பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், திருப்பதி இன்டர்சிட்டி விரைவு ரயிலின் பெண்கள் பெட்டியில் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
பெண்கள் பெட்டியில் தன்னுடன் பயணம் செய்த 6 பெண்களும் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கியதாகவும், அப்போது, பெண்கள் பெட்டியில் ஒரு நபர் ஏறியதாகவும் கூறியுள்ளார். ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு உடனே அந்த ஆண் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும், தாம் கூச்சலிடவே தலைமுடியைப் பிடித்து இழுத்துச் சென்று, ஓடும் ரயிலில் இருந்து தன்னை தள்ளிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில் 3 நாட்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.