அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு போடப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்த ராணுவ விமானத்தை ட்ரம்ப் அரசு ஏன் பயன்படுத்துகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதைப்பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றதும் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியதுடன் நாடு கடத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளார். அதன்படி பிரேசில், கொலம்பியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு சி 17 என்னும் ராணுவ விமானத்தை அமெரிக்கா பயன்படுத்துகிறது. பயணிகள் விமானத்தோடு ஒப்பிடுகையில் சி 17-க்கு ஆகும் செலவு 5 மடங்கு அதிகம். அப்படியிருந்தும் அதை பயன்படுத்துவதன் மூலம் சில செய்திகளை இந்த உலகுக்கு உணர்த்த முயல்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
உரிய ஆணவங்களின்றி ஒரு நாட்டில் வசிப்பவர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றுதான் அழைப்பார்கள். ஆனால் ட்ரம்போ, ‘ஏலியன்கள்’, ‘குற்றவாளிகள்’, ‘சட்டவிரோதமாக படையெடுத்தவர்கள்’ என்றெல்லாம் கூறிவருகிறார். அவர் நினைத்தால் கொஞ்சம் கண்ணியத்துடன் சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்ற முடியும். எனினும் இதுபோன்ற செயல்களை ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டேன் என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தவே கை மற்றும் கால்களில் விலங்குபோடுவது, ராணுவ விமானத்தை பயன்படுத்துவது போன்ற செயல்களை ட்ரம்ப் செய்வதாகக் கூறப்படுகிறது. மற்றொருபுறம் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவது தொடர்பாக அமெரிக்காவில் சில சட்டங்கள் இருப்பதாகவும் அதன்படியே அந்த நாடு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் அண்மையில் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய ட்ரம்ப், “சட்டவிரோதமாக வந்த ஏலியன்களை ராணுவ விமானம் மூலம் திருப்பி அனுப்புவது இதுவே முதன்முறை. இவ்வளவு நாட்கள் நம்மை முட்டாள் என்று நினைத்தவர்கள் இப்போது நம்மை மதிக்கிறார்கள்” என்றார். மேலும் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைது செய்து சிறையில் அடைத்து, மேல்முறையீடு செய்யும் அவகாசத்தை அவர்களுக்கு வழங்க ட்ரம்ப் விரும்பவில்லை.
சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றும் பணி தொடங்கிய அன்றே அதுகுறித்த புகைப்படங்களை வெள்ளை மாளிகை வெளியிட்டது. உரிய ஆவணங்களின்றி அமெரிக்காவில் வசித்த வெளிநாட்டினர் கை – கால்களில் விலங்கோடு விமானத்தில் ஏற்றப்படும் அந்தப் புகைப்படங்கள் மூலம், சட்டவிரோதமாக குடியேறினால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை ட்ரம்ப் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் ராணுவ விமானம் தரையிறங்க மெக்சிகோ அனுமதி மறுத்தது. அதன் காரணமாகவே அந்நாட்டுக்கு 25 விழுக்காடு வரி விதித்தார் ட்ரம்ப். இதன்மூலம் யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் தமது நடவடிக்கைகள் தொடரும் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் அமெரிக்க அதிபர். இந்த விவகாரம் நம் நாட்டு நாடாளுமன்றத்தில் புயலைக் கிளப்பியதும் இங்கே குறிப்பிடவேண்டிய மற்றொரு செய்தி.