இந்தியாவின் தலைநகர் டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கெஜ்ரிவால், புதுடெல்லி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பர்வேஷ் சிங்கிடம் தோல்வியை தழுவியுள்ளார். மூன்று முறை முதலமைச்சராக இருந்த, தன்னை வீழ்த்தவே முடியாது என்ற கர்வம் நிறைந்திருந்த அர்விந்த் கெஜ்ரிவாலை எளிதாக வீழ்த்தி சாதனை படைத்திருக்கும் பர்வேஷ் சிங், பாஜகவின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார்.
பர்வேஷ் வர்மா என அழைக்கப்படும் பர்வேஷ் சாஹிப் சிங், பாஜக தலைவர்களில் ஒருவரும் டெல்லியின் முன்னாள் முதல்வருமான சாஹிப் சிங்கின் மகன் ஆவார். அரசியல் பின்னணி குடும்பத்திலிருந்து வந்த பர்வேஷ் வர்மாவுக்கு முதன்முதலாக 2013ம் ஆண்டு மெஹ்ராலி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.
அங்கு கிடைத்த வெற்றியின் மூலம் பர்வேஷ் வர்மாவின் அரசியல் பயணம் விரிவடையத் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மேற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய பர்வேஷ் வர்மா சுமார் இரண்டரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்ட பர்வேஷ் வர்மா டெல்லி வரலாற்றில் இல்லாத அளவாக சுமார் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தார்.
டெல்லி முழுவதும் மக்கள் செல்வாக்கை பெற்ற பர்வேஷ் வர்மாவை அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்த முடிவு செய்த பாஜக தேசிய தலைமை, அர்விந்த் கெஜ்ரிவால் போட்டியிட்ட நியூ டெல்லி தொகுதியிலேயே அவரை களமிறக்கியது.
பாஜகவின் தேசிய தலைமை தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை மேலும் வலுவாக்கும் வகையில் ஆம் ஆத்மி ஆட்சியில் டெல்லியில் நடைபெற்ற ஊழல்களையும் முறைகேடுகளையும் முன்னிறுத்தியதோடு, காற்றின் திறன், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளையும் சுட்டிக்காட்டி தீவிரப் பிரச்சாரத்தை பர்வேஷ் வர்மா முன்னெடுத்தார். அதற்கு பலனாக புதுடெல்லி தொகுதி மக்கள் பர்வேஷ் வர்மாவுக்கு வெற்றியை பரிசாக வழங்கினர்.
பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கும் புதுடெல்லி தொகுதி என்பது டெல்லியில் நட்சத்திர தொகுதியாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் தலா மூன்று முறை முதலமைச்சர்களாக பதவி வகித்த ஷீலா திட்சித் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவருமே நியூ டெல்லி தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தலை பொறுத்த வரையில் வெற்றியை மட்டுமே இலக்காக நிர்ணயித்து பணியாற்றிய பாஜக, முதலமைச்சர் வேட்பாளர் என யாரையும் முன்னிறுத்தவில்லை என்பதாலும், வீழ்த்தவே முடியாத சக்தியாக கருதப்பட்ட அர்விந்த் கெஜ்ரிவாலை அவரின் சொந்த தொகுதியிலேயே வீழ்த்தியதாலும் பர்வேஷ் வர்மாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கலாம் என பரவலாக பேசப்படுகிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் வெற்றி உறுதியான மறு நிமிடத்தில் பர்வேஷ் வர்மா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்திருந்தாலும் தலைநகர் டெல்லியில் ஆட்சி என்பது கடந்த கால்நூற்றாண்டு கால பாஜகவின் இலக்காகவே இருந்து வந்தது. அந்த இலக்கு பர்வேஷ் வர்மா எனும் சாணக்கியரின் மூலமாக எட்டப்பட்டுள்ளது.
ஷீலா தீட்சித் மற்றும் அர்விந்த் கெஜ்ரிவாலை முதலமைச்சராக்கிய நியூ டெல்லி தொகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பர்வேஷ் வர்மாவே டெல்லியின் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகளவு இருப்பதாக கூறப்படுகிறது.