டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால், மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
டெல்லி மக்கள் அளித்துள்ள ஜனநாயகத் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் மக்களின் தீர்ப்பே முக்கியமானது எனவும் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் பாஜக, டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு செயல்படும் என்று நம்புவதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம் என பல்வேறு துறைகளில் மக்களுக்கு எண்ணற்ற பணிகளை ஆம் ஆத்மி கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்டதை சுட்டிக்காட்டி உள்ள கெஜ்ரிவால் இனி வரும் காலங்களில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக மட்டுமின்றி சமூக துறைகளில் மக்களின் நலனுக்காகவும் தொடர்ந்து உழைப்போம் என குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் தாங்கள் அரசியலுக்கு வந்தோம் என்றும், மக்களுக்காக தாங்கள் எப்போதும் துணைநிற்போம் எனவும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.