டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஓரிடத்தைக்கூட கைப்பற்ற முடியாத காங்கிரஸ் கட்சி இந்த முறை ஆம் ஆத்மியின் சரிவுக்கும் காரணமாகிவிட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கிரிக்கெட்டில் பந்துவீச்சாளர் HATRICK விக்கெட் எடுப்பதை பார்த்திருப்போம். அதேபோல் BATSMAN ரன் எதுவும் எடுக்காமல் DUCK OUT ஆவதையும் கண்டிருப்போம். ஆனால் அரசியல் ஆட்டத்தில் இரண்டையும் ஒன்றாகச் செய்திருக்கிறது காங்கிரஸ் கட்சி. ஆம்… டெல்லி டெல்லி சட்டப்பரேவைத் தேர்தலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஓரிடத்தைக்கூட கைப்பற்ற முடியாத அளவுக்கு அதளபாதாளத்துக்குச் சென்றுவிட்டது
காங்கிரஸ். ஒருகாலத்தில் அந்தக்கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித் இதே டெல்லியில் தொடர்ந்து 3 முறை ஆட்சியைப் பிடித்து HATRICK சாதனை படைத்தார். ஆனால் இன்றைக்கு HATRICK ZERO என்ற நிலைக்கு வந்துவிட்டது காங்கிரஸ்.
இண்டிக் கூட்டணியில் ஏற்பட்ட விரிசலால் ஆம் ஆத்மியும் காங்கிரசும் தனித்தனியே போட்டியிட்டன. நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாகச் சென்று வாக்கு கேட்டவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே ஒருவரையொருவர் கடுமையாக தூற்றிக்கொண்டனர். இருவரும் தனித்தனியாக போட்டியிட்டதால் அதிக இழப்பு ஆம் ஆத்மிக்குத்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். உதாரணமாக அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி அடைந்ததற்கு காங்கிரஸ் பெற்ற வாக்குகளே காரணமாகிவிட்டன.
அவருக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த பர்வேஷ் சிங்குக்கும் இடையிலான வித்தியாசம் 4 ஆயிரத்து 89 வாக்குகள். ஆனால் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் தீக்ஷித் பெற்ற வாக்குகள் 4 ஆயிரத்து 568. ஒருவேளை இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தால் முடிவுகள் வேறு மாதிரி அமைந்திருக்கலாம். மணீஷ் சிசோடியா உட்பட மேலும் சில ஆம் ஆத்மி வேட்பாளர்களின் நிலையும் இதுதான். ஏற்கனவே காங்கிரஸ் வாக்கு வங்கியில் பெரும்பகுதி ஆம் ஆத்மிக்கு சென்றுவிட்டது.
அதோடு கூட்டணி மூலம் எஞ்சிய காங்கிரஸ் வாக்குகளும் அந்தக் கட்சிக்கு கிடைத்தன. ஆனால் இந்த முறை இருவரும் தனித்தனியே போட்டியிட்டதால் பெரும் பின்னடைவை ஆம் ஆத்மி சந்தித்திருக்கிறது.
மற்றொருபுறம் காங்கிரசின் வீழ்ச்சிக்கும் இது காரணமாகிவிட்டது. ஆம் ஆத்மியிடம் இழந்த வாக்கு வங்கியை இந்தத் தேர்தலில் மீட்க காங்கிரஸ் முயற்சித்தது. ஆம் ஆத்மிக்கு துணையாக இருப்பதைவிட தனித்துப்போட்டியிடுவது தங்கள் கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று காங்கிரஸ் தலைவர்கள் நினைத்தார்கள்.
இன்னும் சொல்லப்போனால் இந்தத் தேர்தலில் வெற்றியைவிட இழந்த வாக்குகளை பெறவே விரும்பினோம் என காங்கிரஸ் வேட்பாளர்களே கூறுகிறார்கள். கடைசியில் அந்த முயற்சி அவர்களுக்கும் பலன் தராமல் போய்விட்டது. அடுத்ததாக பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் என்னும் பெரும் சவாலை காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்தே இண்டிக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதைப் பற்றி கூட்டணிக் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. தி.மு.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் காங்கிரசை முழுமையாக ஆதரிக்கவில்லை. இண்டிக் கூட்டணிக்கு தலைமையேற்க மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றவர்கள் சரியான தேர்வாக இருப்பார்கள் என்ற பேச்சுகள் எல்லாம் முன்பே எழுந்துவிட்டன.
அப்படியிருக்கையில் டெல்லி தேர்தலில் அடைந்திருக்கும் படுதோல்வி இண்டிக் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்பதைக் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. நாட்டை ஆண்ட கட்சி இன்று ஒரு கூட்டணிக்கு தலைமை ஏற்கக்கூட தகுதி இல்லாத இடத்துக்குச் சென்றுவிட்டதோ என்று எண்ண வைக்கின்றன சமீபத்திய தேர்தல் முடிவுகள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அதற்கு முன்பு நடைபெற்ற சில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் பெரியண்ணன் மனப்பான்மையுடன் காங்கிரஸ் நடந்து கொண்டதாக புகார் எழுந்தது. இப்போது அவையெல்லாம் மேலும் வலுப்பெறலாம். அதை காங்கிரஸ் எப்படி எதிர்கொள்ளப்போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம்.