திண்டிவனம் அரசு கலைக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த பேராசிரியரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில், 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு, பொருளாதார ஆசிரியராக பணியாற்றி வரும் குமார் என்பவர் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் பேராசிரியர் குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், பேராசிரியர் குமார் மாணவியிடம் தொலைபேசியில் தகாத முறையில் பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.