மணிப்பூர் முதலமைச்சர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இன மக்கள், கடந்த 2023ஆம் ஆண்டு தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி போராட்டத்தில் குதித்தனர். இதை எதிர்த்து குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தினர்.
அந்த அமைதிப் பேரணியில் கலவரம் வெடிக்க மணிப்பூர் முழுவதும் கலரவம் ஏற்பட்டது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். மணிப்பூரில் நடைபெற்ற வன்முறையில் இதுவரை 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். எனினும் இந்த வன்முறை இன்றளவும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையே மணிப்பூரில் நடந்த கலவரங்களுக்கு அம்மாநில முதலமைச்சரான பிரேன் சிங்கே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு மணிப்பூர் அரசு மறுப்பு தெரிவித்தது.
இதுதொடர்பாக விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை இம்பாலில் உள்ள ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் அவர் வழங்கினார்.
இதனிடையே தான் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தில், மணிப்பூர் மக்களுக்கு சேவையாற்றிய தருணம் பெருமையானது என பிரேன் சிங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூர் மக்கள் ஒவ்வொருவருக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியதற்காக மத்திய அரசுக்கு நன்றி எனவும் அவர் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.