சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் கோப்பையை பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கெட் வென்று அசத்தியுள்ளார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில், சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஜப்பானின் ஷின்டாரோ மோச்சிசுகி – கைடோ உசுகி ஜோடி, இந்தியாவின் சாகேத் மைனேனி – ராம்குமார் ராமநாதன் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒற்றையர் பிரிவின் இறுதி போட்டியில், சுவீடனின் இலியாஸ் யெமர், பிரான்ஸின் கைரியன் ஜாக்கெட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் இலியாஸ் யெமரை 7-க்கு 6, 6-க்கு 4 என்ற நேர்செட் கணக்கில் வீழ்த்தி கைரியன் ஜாக்கெட் சாம்பியன் பட்டம் வென்றார்.
இதனையடுத்து பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கெட்டுக்கு 20 லட்சம் ரூபாய் பணமும், 100 ஏடிபி சர்வதேச புள்ளிகளும் வழங்கப்பட்டன. பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கெட் முதல்முறையாக ஏடிபி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார்.