மகா கும்பமேளாவை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராடினார்.
உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய நதிகள் கூடும் திரிவேணி சங்கமத்தில் கடந்த ஜனவரி 13ஆம் தேதி மகா கும்பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது.
உலகின் மாபெரும் ஆன்மிக – கலாசார நிகழ்வாக கருதப்படும் இந்த கும்பமேளாவில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். தற்போது வரை 41 கோடி பக்தர்கள் புனித நீராடி உள்ள நிலையில், வரும் 26ஆம் தேதி மகா கும்பமேளா விழா நிறைவு பெறுகிறது.
மகா கும்பமேளாவை முன்னிட்டு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் உள்ளிட்டோர் புனித நீராடிய நிலையில், திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு புனித நீராடினார்.
முன்னதாக, பிரயாக்ராஜ் வந்தடைந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். குடியரசு தலைவரின் வருகையையொட்டி பிரயாக்ராஜில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.