சென்னை மற்றும் சுற்றுயுள்ள நான்கு மாவட்டங்களில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாத இடத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்திற்கு பின் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தலைமை செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஏழை மக்களுக்கான நிவாரணத்தில் மிகப்பெரிய புரட்சியை செய்திருப்பதாகவும், சென்னை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஆட்சேபனை இல்லாமல் இருக்கும் இடத்தில் 32 கிலோ மீட்டர்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என தெரிவித்தார்.
அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்றும், பணிகள் விரைவாக நடைபெறுவதற்காக மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி 29,187 பேர் பட்டா இல்லாமல் ஆட்சேபனையற்ற புறம்போக்குகளில் குடியிருக்கிறார்கள். அவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக கூறினார். மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும், 57 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தம் 87 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக கூறினார்.
இச்சட்டம் 1962ல் வந்த நிலையில், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்ததாகவும், இன்று இதில் முடிவெடுக்கப்பட்டுள்ளாதாக கூறினார். ஆட்சி அமைந்த பிறகு, 10 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும், 6,29,000 பேருக்கு பட்டா வழங்க உள்ளதாகவும், தனிமனிதனுக்கு குடியிருக்க வீடோ, இடமோ இல்லாமல் இருக்கக் கூடாது என்ற அடிப்படையில் முதலமைச்சர் செயல் பட்டு வருவதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.